×

பால்வளத் துறை அமைச்சர் நாசர் விடுவிப்பு தமிழக அமைச்சரவை மாற்றம்: டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சர்

சென்னை: தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, புதிய அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. திமுக அரசு 2021 மே 7ம் தேதி பதவி ஏற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். நாட்டிலேயே சிறந்த ஆளுமைகளை கொண்டு அமைச்சரவை அமைக்கப்பட்டதாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள், துடிப்பு மிக்க இளம் அமைச்சர்கள் என கலவையாக அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் 2022 மார்ச் மாதம் சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறைக்கும், அந்த துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

திமுக தேர்தல் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியதற்காக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என்று திமுக மூத்த நிர்வாகிகளும், இளைஞர்களும் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 2022 டிசம்பர் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதனால் அமைச்சரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனிடம் கூடுதல் துறையாக இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டது. கூடுதலாக சிறப்பு திட்டம் அமலாக்கத்துறையும் அவருக்கு தரப்பட்டது. அவரோடு சேர்த்து, கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித்துறைக்கும், அந்த துறையின் அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறையும் ஒதுக்கப்பட்டது.

வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அமைச்சராக இருந்த முத்துசாமியிடம் இருந்து, பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கண்ணப்பனுக்கு, கூடுதலாக கிராமத் தொழில் வாரியத்துறை வழங்கப்பட்டது. இதனால் காந்தி, கைத்தறி மற்றும் துணி நூல் துறையை கவனித்து வந்தார். ராமச்சந்திரனிடம் இருந்த வனத்துறை, மதிவேந்தனுக்கும், இவரிடம் இருந்த சுற்றுலாத்துறை ராமச்சந்திரனுக்கும் வழங்கப்பட்டது. ஐ.பெரியசாமியிடம் இருந்த புள்ளியல்துறை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. இவ்வாறு 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தநிலையில், தமிழக அமைச்சரவை 3வது முறையாக சிறிய அளவில் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. முதல்வர் வருகிற 23ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளதால் அதற்கு முன்னதாக இந்த மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்தநிலையில், தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைப்படி, மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார். இவருக்கான பதவி ஏற்பு விழா நாளை காலை 10.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. அதேபோல, பால்வளத்துறை அமைச்சர் நாசர், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதனால் நாளை, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிமையான விழாவில் டி.ஆர்.பி.ராஜா, புதிய அமைச்சராக பதவி ஏற்கிறார். அதேநேரத்தில், டி.ஆர்.பி.ராஜாவுக்கு எந்த இலாகா ஒதுக்கப்படும் என்றும், நாசரிடம் இருந்த ஆவின் யாருக்கு வழங்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவிக்கவில்லை. இதனால் டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்ற பிறகு, அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் குறித்து அவரவர் மனதுக்கு தோன்றியபடி சமூக வலைதளங்களில் வெளியிட்ட கற்பனை கதைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

The post பால்வளத் துறை அமைச்சர் நாசர் விடுவிப்பு தமிழக அமைச்சரவை மாற்றம்: டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Dick Resources ,Nasser Lavedu ,Tamil Nadu Cabinet ,D.C. ,R.R. ,Raja ,Chennai ,Tamil ,Nadu ,Cabinet ,Disheries ,Nasser ,Mannargudi ,MLA ,T. R.R. ,Nasser Ludi ,D.C. R.R. ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...